மெக்சிகோ அணியை வீழ்த்தி அபாரம்- வெற்றிக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி கூறியது என்ன ?
அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது.
தோகா,
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும். இதில் நேற்று நள்ளிரவில் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டீனா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின.
முன்னதாக சவுதி அரேபியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த இரு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல் மெக்சிகோ அணி, போலாந்து அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் டிரா செய்திருந்தது. இந்த சூழலில் பரபரபாக தொடங்கிய இன்று ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அப்போது அர்ஜெடீணா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜெண்டீனா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் மெஸ்ஸி கூறியதாவது ;
அர்ஜென்டினாவுக்கு மற்றொரு உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. நான் மக்களுக்கு அதையே சொல்கிறேன், தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள் . நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தோம். . நாங்கள் வெற்றி பெற வேண்டும், அதனால் நாங்கள் அதை மட்டுமே சார்ந்து இருக்கிறோம்."
"முதல் பாதியில் நாங்கள் விரும்பியபடி விளையாடவில்லை, இரண்டாவது பாதியில் நாங்கள் சிறப்பாக விளையாட தொடங்கினோம் .இவ்வாறு தெரிவித்தார்