உலக கோப்பை கால்பந்து: இன்று ஒரே நாளில் 4 போட்டிகள்


உலக கோப்பை கால்பந்து: இன்று ஒரே நாளில் 4 போட்டிகள்
x
தினத்தந்தி 21 Nov 2022 11:49 PM GMT (Updated: 2022-11-22T05:30:03+05:30)

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளது.

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன.

பட்டம் வெல்ல தகுதியுள்ள அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா அணிக்கு லயோனல் மெஸ்சி கேப்டனாக செயல் பட உள்ளார். இவ்விரு அணிகளும் இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் இவ்விரு அணிகளும் சந்தித்துள்ளன. இதில் 2 போட்டிகளில் அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிரா ஆனது.

இதையடுத்து டி பிரிவில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் டென்மார்க், துனிசியா அணிகள் மோதுகின்றன. இதுவரை ஒரே ஒரு சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகள் மோதியுள்ளன. இந்த ஒரு ஆட்டத்திலும் டென்மார்க் அணியே வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் விளையாடுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மற்ற 2 போட்டிகளும் டிரா ஆனது.

இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 முறை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் பிரான்ஸ் அணி 3 முறையும், ஆஸ்திரேலியா அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.


Next Story