சிக்கனா.. மட்டனா..? அடிக்கடி சாப்பிடுவதற்கு ஏற்ற இறைச்சி எது?

கோழி இறைச்சியில் அதிக கொழுப்பு இருக்காது. இது உணவு கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
சிக்கனா.. மட்டனா..? அடிக்கடி சாப்பிடுவதற்கு ஏற்ற இறைச்சி எது?
Published on

உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் புரதமும் ஒன்றாகும். அசைவ உணவை பொறுத்தவரை ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி இரண்டிலுமே புரதம் இருக்கிறது என்றாலும் எதன் புரதம் சிறந்தது, எதனை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. இதுதொடர்பாக தேசிய மருத்துவ நூலகம் மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட ஆய்வில் முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆட்டிறைச்சி கொழுப்பை உட்கொள்வது அதிக கலோரிகள் உடலில் சேருவதற்கு வழிவகுக்கும். அத்துடன் குளுக்கோஸ், டிரைகிளிசரைடுகள், கொழுப்பு இவற்றின் செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். புரதத்தை கணக்கிடும்போது ஆட்டிறைச்சியில் கொழுப்பின் அளவே அதிகமாக இருக்கிறது. கோழி இறைச்சியை பொறுத்தமட்டில், உடல் உறுப்புகளுக்கு ஏற்ப கலோரி அளவுகள் மாறுபடும். குறிப்பாக கோழியின் மார்பகங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக இறக்கைகள், தொடைகளில் அதிக கலோரிகள் உள்ளடங்கி இருக்கும்.

இருப்பினும் கோழி இறைச்சியை விட ஆட்டிறைச்சியில்தான் கலோரிகள் அதிகம். ஆட்டிறைச்சியில் கொழுப்பின் அளவு அதிகம் இருப்பதுதான் அதற்கு காரணம். அதாவது 100 கிராம் ஆட்டிறைச்சியில் 230 முதல் 300 வரை கலோரிகள் இருக்கும். ஆனால் கோழி இறைச்சியின் மார்பு பகுதியில் (தோல் இல்லாமல்) 165 கலோரிகளே இருக்கும். அதேபோன்றே கோழியின் மார்பக பகுதியில் 100 கிராமுக்கு 31 கிராம் புரதம் இருக்கும். ஆனால் ஆட்டிறைச்சியில் 25 கிராம் புரதமே உள்ளடங்கி இருக்கும்.

தேசிய சிக்கன் கவுன்சிலின் கூற்றுப்படி, கோழி இறைச்சியில் மெலிந்த புரதம் காணப்படும். அதிக கொழுப்பு இருக்காது. இது உணவு கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும் கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவே உள்ளது. 

எனவே, ஆரோக்கிய நன்மைகளை பொறுத்தவரை ஆட்டிறைச்சியை விட கோழி இறைச்சி முதன்மையானது. இருப்பினும் இரண்டையும் மிதமான அளவிலேயே சாப்பிடுவது நல்லது. அடிக்கடி சாப்பிடுவதற்கு கோழி இறைச்சி ஏற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com