தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்

தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை கே.வி. மகாலில் தேமுதிக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சிபணிகள், எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள், திட்டங்கள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
இந்த நிலையில், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தையில் இன்று நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தலைமை கழக நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தேமுதிக, இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகரன், B.Arch., நியமிக்கப்படுகிறார். இவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






