கொப்பரைக்கு தட்டுப்பாடு: தேங்காய் எண்ணெய் விலை 'கிடுகிடு' உயர்வு

கொப்பரைத் தேங்காய் தட்டுப்பாட்டால், தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
சென்னை,
தேங்காய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. மொத்த மார்க்கெட்டிலேயே ஒரு கிலோ ரூ.70-ஐ தாண்டிய நிலையில், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, தேங்காய் எண்ணெய் விலையும் மறுபக்கம் எகிறி வருகிறது. தேங்காய் எண்ணெய்க்கு மூலப்பொருளான கொப்பரைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதன் காரணமாக அதன் விலை உயருகிறது.
கொப்பரைத் தேங்காய் தட்டுப்பாட்டால், தேங்காய் எண்ணெய் விலை கடந்த 2 மாதங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.160 வரையிலும், கிலோவுக்கு ரூ.180 வரையிலும் உயர்ந்து இருப்பதாக எண்ணெய் வியாபாரிகள் கூறினார்கள்.
அதாவது, கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.234-க்கும், ஒரு கிலோ ரூ.260-க்கும் விற்பனை ஆனது. அதுவே நேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் ரூ.396-க்கும், ஒரு கிலோ ரூ.440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது சில இடங்களில் விலை சற்று அதிகரித்தும் விற்பனை செய்யப்படுவதை பார்க்க முடிந்தது.
அதேபோல் சென்னையில் சாலையோரக் கடைகளில் ரூ.40 முதல் ரூ.70 வரையில் விற்கப்பட்ட இளநீர், தற்போது ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், சில இடங்களில் பெரிய அளவிலான இளநீர் ரூ.90-க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.