பி.டெக் படிப்பிற்கு பிறகான வேலைவாய்ப்புகள் என்னென்ன...? - தெரிந்து கொள்ளுங்கள்


பி.டெக் படிப்பிற்கு பிறகான வேலைவாய்ப்புகள் என்னென்ன...? - தெரிந்து கொள்ளுங்கள்
x

இந்த படிப்பு வேலைக்கு மட்டுமல்ல, உயர்கல்விக்கும் சிறந்த தேர்வாகும்.

பி.டெக் எனப்படும் இளங்கலை தொழில்நுட்பம் நாட்டின் மிகவும் பிரபலமான இளங்கலைப் படிப்புகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களால், அதிகம் தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக திகழ்கிறது. எல்லா துறைகளிலும் பொறியியல் நுட்பம் தேவைப்படுவதால், டீன்-ஏஜ் மாணவ-மாணவிகளும், இதை விரும்பி படிக்கிறார்கள்.

இந்த படிப்பு வேலைக்கு மட்டுமல்ல, உயர்கல்விக்கும் சிறந்த தேர்வாகும். பி.டெக் படித்துவிட்டு தொழில் ரீதியாக நீங்கள் எவ்வாறு உங்கள் வாழ்க்கையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லலாம் என்பதை விரிவாக இங்கே பார்க்கலாம்.

* மேற்படிப்பு...

பி.டெக் முடித்த பிறகு, மாணவர்கள் எம்.டெக் அல்லது எம்.இ. ஆகிய மேல் படிப்பைத் தொடரலாம். ஏனென்றால், இவை இரண்டும் இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளால் வழங்கப்படும் முதுகலை தொழில்முறை பட்டப்படிப்புகள். எம்.டெக் என்றால் மாஸ்டர் ஆப் டெக்னாலஜி, எம்.இ என்பது மாஸ்டர் ஆப் என்ஜினீயரிங். ஐ.ஐ.டி.கள் மற்றும் என்.ஐ.டி.கள் போன்ற இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் வழங்கும் எம்.டெக் திட்டங்களில் சேர்க்கை பெற, மாணவர்கள் பொறியியலில் `கேட்' (கிராஜுவேட் ஆப்டிட்யூட்-GATE) தேர்வில் பங்கேற்க வேண்டும்.

* எம்.பி.ஏ...

பி.டெக்கிற்கு பிறகு மாணவர்கள் அதிகம் விரும்புவது எம்.பி.ஏ.தான். பொறியியல் பட்டதாரிகள் பொதுவாக பணி அனுபவத்தை பெறுவதற்கு பதிலாக எம்.பி.ஏ./பி.ஜி.டி.எம். படிப்புகளை மேற்கொள்கின்றனர். அதற்கு தனி மதிப்பும் இருக்கிறது. சிறந்த எம்.பி.ஏ. கல்லூரிகளில் சேர, மாணவர்கள் கேட் மற்றும் சிமேட் போன்ற பிரபலமான நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

* வளாக பணிவாய்ப்புகள்...

பொதுவாக, கல்லூரிகளில் வளாக நேர்காணல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு வந்து மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்கின்றன. பி.டெக் படிப்பிற்கு பிறகு, தொழில்நுட்பத் துறைகளில் தொடக்க நிலை பணிகளுக்கு, தனியார் நிறுவனங்களால் மாணவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

* தனியார் நிறுவனங்கள்...

வளாக நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பாத மாணவர்களும் பி.டெக் படிப்பை முடித்த பிறகு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். நுழைவு-நிலை தொழில்நுட்ப பணிகளில் இணைந்த பிறகு, மாணவர்கள் கார்ப்பரேட் உலகில் அனுபவத்துடன் காலூன்ற முடியும். எதிர்காலத்தில் நல்ல சம்பளத்துடன் நல்ல பதவியில் இருப்பார்கள்.

* பொறியியல் சேவை தேர்வு...

பொறியியல் சேவைகள் தேர்வு என்பது யு.பி.எஸ்.இ. மூலம் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும். பி.டெக் படித்துவிட்டு பாதுகாப்பு, பொதுப்பணித்துறை, ரெயில்வே போன்ற துறை தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். இந்த தேர்வில் வெற்றி பெற்றால், மத்திய அரசு பணியில் சேவையாற்றலாம். அரசாங்க சம்பளம் பெறலாம்.

* பொதுத்துறை வேலைகள்...

பி.டெக் முடித்த பிறகு, மாணவர்கள் `கேட்' மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் தொழில்நுட்ப வேலைகளை பெறலாம். அதாவது, பல பொதுத்துறை நிறுவனங்கள் பி.டெக் மாணவர்களை `கேட்' மதிப்பெண்களின் அடிப்படையில் நுழைவு நிலை வேலைகளுக்கு பணியமர்த்துகின்றன. சி.ஐ.ஐ., இஸ்ரோ மற்றும் பார்க் (BARC) போன்ற சில பொதுத்துறை நிறுவனங்களும் பி.டெக் மாணவர்களை நுழைவு நிலை வேலைகளில் பணியமர்த்த தனியாக தேர்வுகளை நடத்துகின்றன.

1 More update

Next Story