யூபிஎஸ்சி தேர்வில் குளறுபடியா? மதுரை கலெக்டர் விளக்கம்


யூபிஎஸ்சி தேர்வில் குளறுபடியா? மதுரை கலெக்டர் விளக்கம்
x

தபால் நிலையத்தில் விடைத்தாள்கள் ஒப்படைக்காமல் மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு விடைத்தாள்கள் எடுத்து வரப்பட்டுள்ளன

மதுரை,

மதுரையில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய தேர்வரின் தந்தை சீனிவாசன் என்பவர், மின்னஞ்சல் வாயிலாக மாவட்ட கலெக்டர் பீரவின்குமார் வழியாக யு.பி.எஸ்.சி. ஆணையத் தலைவருக்கு புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருந்தது:"நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. என்.டி.ஏ. - என்.ஏ. தேர்வுகள் நேற்று முன்தினம் (14-ந்தேதி) நடத்தப்பட்டது. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய தேர்வுகள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற தேர்வுகளில் 700 தேர்வர்கள் தேர்வை எழுதினர். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் விடைத்தாள்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மாலையில் நடைபெற்ற தேர்வின் முடிவில் சீல் வைக்கப்பட்ட விடைத்தாள்கள் தலைமை தபால் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தபால் நிலையத்தில் விடைத்தாள்கள் ஒப்படைக்காமல் மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு விடைத்தாள்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. கல்லூரி வளாகத்திற்கு விடைத்தாள்கள் மீண்டும் ஏன் எடுத்து வரப்பட்டன? அதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை. தேர்வு செயல்முறையின் நேர்மை, ரகசியத்தன்மை மற்றும் நியாயத்தன்மை குறித்து கவலைகளை எழுப்புவதாகவும், புகார் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். தேர்வை நடத்திய பொறுப்பாளர்களிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டும். கல்லூரி வளாகத்தில் உள்ள சி.சி.டிவி. காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். அதில்:

"மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் யு.பி.எஸ்.சி. தேர்வு முடிந்து விடைத்தாள்கள் பாதுகாப்புடன் தபால் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது விடைத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டபோது, ஒரு விடைத்தாள் சேர்க்கப்படாமல் கல்லூரியிலேயே இருந்ததாக தேர்வு மைய கண்காணிப்பாளர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விடைத்தாள்களை ஒப்படைக்க சென்ற தேர்வு மைய பொறுப்பாளர்கள் மீண்டும் கல்லூரிக்கு வந்து, ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட விடைத்தாள் பண்டலை பிரித்து, விடுபட்ட விடைத்தாளை அதனுள் சேர்த்து மீண்டும் சீல் வைத்து தபால் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதில் உரிய வழிமுறைகளை தேர்வு மைய அலுவலர்கள் கடைப்பிடித்துள்ளனர்." என அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story