சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

11 வயது சிறுமியை வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே அருகே மும்ராவை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி வீட்டின் அருகே தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்(வயது32) என்ற வாலிபர் சிறுமியின் வாயை பொத்தி யாரும் இல்லாத மறைவிடத்திற்கு கடத்தி சென்றார். பின்னர் அங்கு வைத்து சந்தோஷ், சிறுமியை பலாத்காரம் செய்தார். இதுபற்றி யாரிடமும் தெரிவித்தால் சிறுமியின் பெற்றோரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தாள். மேலும் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதாள். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்தனர்.
இந்தப்புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர். இவர் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது வாலிபர் சந்தோஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இதனை தொடர்ந்து குற்றவாளியான சந்தோசுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி டி.எஸ். தேஷ்முக் தீர்ப்பு அளித்தார்.






