100 நாள் வேலை திட்டம் ரத்து; நாடு தழுவிய எதிர்ப்பு தேவை - மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்


100 நாள் வேலை திட்டம் ரத்து; நாடு தழுவிய எதிர்ப்பு தேவை - மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
x

100 நாள் வேலை திட்டம் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) பதிலாக விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய எதிர்ப்பு தேவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) என்பது ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட சதி ஆகும். ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டமாகும். அது உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. அந்தத் திட்டத்தின் தாக்கத்தின் காரணமாகவே அதற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டது.

மோடி அரசாங்கம், எந்தவித ஆய்வோ, மதிப்பீடோ அல்லது மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனையோ செய்யாமல், அந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களின் விஷயத்தில் அவர்கள் செய்தது போலவே இதிலும் செய்துள்ளனர்.

இந்தியாவின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 2015-ல் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் கடுமையான எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டன. அதே போல், தற்போது 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு நாடு தழுவிய எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story