ஜார்க்கண்டில் பேருந்து விபத்து - 18 பக்தர்கள் பலி

பாபா பைத்யநாத் தாம் கோவிலில் புனித நீரை வழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணிக்கும் ஷ்ரவாணி மேளாவின் போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள மோகன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கன்வாரியா பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்தனர். விபத்தில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், மீட்புக்குழுவினரும் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாபா பைத்யநாத் தாம் கோவிலில் புனித நீரை வழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணிக்கும் ஷ்ரவாணி மேளாவின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் கன்வாரியா பக்தர்கள் பலியானதை அந்தத் தொகுதியின் பாஜக எம்.பி. நிஷிகாந்த் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், எனது மக்களவைத் தொகுதியான தியோகரில் கன்வாரியா பக்தர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பாபா பைத்யநாத் ஜி இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை பலியானோரின் குடும்பத்தினருக்கு வழங்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.






