ஆபாச வீடியோவை அனுப்பி உல்லாசத்திற்கு அழைத்த 2 பேராசிரியைகள்.. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு

தங்களது ஆசைக்கு இணங்க மறுத்தால் தேர்வில் தோல்வி அடைய வைப்பதாக மாணவரை தொந்தரவு செய்தனர்.
அமராவதி,
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், எம்.வி. பி. காலனியை சேர்ந்தவர் சூரிபாபு. ஆட்டோ டிரைவர். இவரது மூத்த மகன் சாய் தேஜா (வயது22). இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
சாய்தேஜா மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டு படிப்பில் கவனம் செலுத்தினார். வகுப்பில் சாய்தேஜா முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவராக திகழ்ந்தார். இந்த நிலையில் புள்ளியல் துறை பேராசிரியை ஒருவரும், வகுப்பு பேராசிரியை ஒருவரும் சாய் தேஜாவை தங்களது ஆசைக்கு இணங்குமாறு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களது ஆசைக்கு இணங்க மறுத்ததால் செய்முறை தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வழங்கி மிரட்டல் விடுத்தனர்.
2 பேராசிரியைகளும் சாய் தேஜாவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தனர். தங்களது ஆசைக்கு இணங்க மறுத்தால் தேர்வில் தோல்வி அடைய வைப்பதாக தொந்தரவு செய்தனர். சாய் தேஜா இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். நேற்று காலை சாய் தேஜாவின் தந்தையும் அவரது மாமாவும் கல்லூரிக்கு வந்தனர்.
பேராசிரியைகளின் பாலியல் தொல்லை குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். வீட்டிலிருந்த மகனிடம் அவரது தந்தை 2 முறை செல்போனில் பேசினார். சாய் தேஜாவின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிப்பதை அறிந்த பேராசிரியை வீட்டில் இருந்த சாய் தேஜாவுக்கு செல்போனில் மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் பயந்துபோன சாய் தேஜா தனது செல்போனில் இதுகுறித்து ஆடியோ பதிவிட்டார். பின்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாய் தேஜாவின் தந்தை மகனுக்கு பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி துடித்தார். போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். சாய் தேஜா இறந்தது குறித்து அறிந்த கல்லூரி மாணவர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் பேராசிரியைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர்.
போலீசார் சாய் தேஜாவின் செல்போனை பறிமுதல் செய்தனர். பேராசிரியர்கள் மாணவருக்கு அனுப்பிய ஆபாச படங்கள், வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பேராசிரியைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






