‘2 ஆயிரம் கி.மீ. ரெயில் பாதை ‘கவச்’ அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது' - மத்திய மந்திரி தகவல்

ரெயில் விபத்துகளை தற்போதைய அரசு 90 சதவீதம் குறைத்துள்ளது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி ரெயில் பாதுகாப்பு அமைப்பான ‘கவச்’(Kavach) குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“கவச் என்பது ஒரு சிக்கலான அமைப்பாகும். இதில் தண்டவாளங்கள் நெடுகிலும் ஆப்டிகல் பைபர் கேபிள் (OFC) பதிப்பது, தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவுவது உள்பட ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன.
இந்திய ரெயில்வே இதுவரை 7,129 கி.மீ. தூரத்திற்கு ஆப்டிகல் பைபர் கேபிள்களை பதித்துள்ளது, 860 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவியுள்ளது, 767 நிலையங்களை தரவு மையங்களுடன் இணைத்துள்ளது, 3,413 கி.மீ. தூரத்திற்கு தண்டவாளத்தை ஒட்டிய உபகரணங்களை நிறுவியுள்ளது, மேலும் 4,154 இன்ஜின்களில் இந்த அமைப்பை நிறுவியுள்ளது.
அதுமட்டுமின்றி, இதுவரை 2 ஆயிரம் கி.மீ. ரெயில் பாதையை ‘கவச்’ அமைப்பின் கீழ் கொண்டு வரும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த பணியின் முன்னேற்றம் மிக வேகமாக உள்ளது. ரெயில் விபத்துகளை பொறுத்தவரை, 2014-ம் ஆண்டில் 135 ஆக இருந்த பெரும் விபத்துகளின் எண்ணிக்கையை, தற்போதைய அரசு 11 ஆக(90 சதவீதம்) குறைத்துள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






