ராஜஸ்தான் பஸ்சில் திடீர் தீ விபத்து: உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்ன? விசாரணையில் புதிய தகவல்

ராஜஸ்தான் பஸ் விபத்தில் திடீர் தீ விபத்து: உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்ன? விசாரணையில் புதிய தகவல்
ஜெய்சால்மர்,
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு நேற்று முன்தினம் தனியார் ஏ.சி. சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ் கிளம்பிய 10 நிமிடத்திலேயே அதன் பின்புறத்தில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஒரு சிறுவன் நேற்று இறந்தான். இதனால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. விசாரணையில் பஸ்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. பஸ்சின் ஏ.சி. கம்ப்ரசர் எந்திரத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து டீசல், ஏ.சி. கியாஸ் மற்றும் பஸ்சின் உள்ளே உள்ள பைபர் பொருட்களால் தீ வேகமாக பரவியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர். அதேநேரம் உயிரிழப்பு அதிகரித்ததற்கு மேலும் பல்வேறு காரணங்களை விசாரணை அதிகாரிகள் அடுக்கினர்.
அந்த பஸ்சில், அவசரகால கதவு, ஜன்னல்களை உடைப்பதற்கான சுத்தியல் எதுவும் இல்லை. ஒரேயொரு கதவு மட்டுமே கொண்டிருந்தது. தீப்பிடித்த சில நிமிடங்களில் பஸ் தீப்பந்து போல மாறியது. உடனே பயணிகள் வெளியேற முண்டியடித்தபோது, துரதிர்ஷ்டவசமாக கதவும் மூடி ‘லாக்’ ஆகிவிட்டது. இதனால் பயணிகள் வெளியேற முடியாமல் பஸ்சுக்குள்ளேயே உயிர் விடும் நிலைக்கு தள்ளப்பட்ட சோகம் கண்டறியப்பட்டுள்ளது. பஸ்சின் ஒயரிங்கில் தீப்பிடித்தால் தானியங்கி கதவு தானாகவே மூடிவிடும் எனவும், அதுதான் இந்த சம்பவத்திலும் நடந்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.






