'தோழியாக இருந்தாலும் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை கிடையாது' - டெல்லி ஐகோர்ட்டு


தோழியாக இருந்தாலும் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை கிடையாது - டெல்லி ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 25 July 2025 4:23 PM IST (Updated: 25 July 2025 6:03 PM IST)
t-max-icont-min-icon

சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட பெண் மைனர் சிறுமியாக இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி விகாஸ்புரி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த மைனர் சிறுமியுடன் நட்பாக பழகி, பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பலமுறை அந்த சிறுமியை மிரட்டி கட்டிட தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கட்டிட தொழிலாளி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், பாலியல் உறவில் ஈடுபட்டபோது அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டது என்றும், அவருடன் நட்பாக பழகி அவரது சம்மதத்துடன்தான் உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி கிரீஷ் கத்பாலியா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "தோழியாக இருந்தாலும் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை கிடையாது" என்று குறிப்பிட்ட நீதிபதி, "பாதிக்கப்பட்ட பெண்ணின் கல்வி சான்றிதழ்களின் அடிப்படையில் சம்பவம் நடந்தபோது அவர் மைனர் சிறுமியாக இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டிருந்தாலும் அது சட்டப்படி குற்றமாகவே கருதப்படும்" என்று தெரிவித்து, மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

1 More update

Next Story