கொச்சியில் விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்


கொச்சியில் விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
x

கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது.

கொச்சி,

வளைகுடா நாடான சவுதி அரேபியாவின் ஜித்தாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் பயணம் செய்தனர். கொச்சி அருகே வானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் லேண்டிங் கியர் எனப்படும் எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதனால் உடனடியாக விமானத்தை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முடிவு செய்தார். அதற்கான அனுமதியை கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் இருந்து பெற்றார். இதையடுத்து கோழிக்கோடு செல்லாமல் விமானத்தை கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கும் முயற்சியில் விமானி ஈடுபட்டார்.

அதன்படி, நீண்ட போராட்டத்திற்கு பிறகு விமானம், விமான நிலைய ஓடுபாதையில் தரையிறக்கப்பட்ட போது, விமானத்தின் டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். அங்கு ஏற்கனவே விமானத்தை பத்திரமாக தரையிறக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்ததால், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் பெரும் விபத்தில் இருந்து விமானம் தப்பியது.

அதோடு 160 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு, பஸ்களில் கோழிக்கோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு, டயர் வெடிப்பை சரிசெய்யும் பணி நடைபெற்றது. டயர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story