ஆப்கானிஸ்தான் மந்திரியின் தாஜ்மகால் பயணம் ரத்து

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இன்று ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்க்க இருந்தார்.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் வெளியுறவுதுறை மந்திரி அமீர்கான் முத்தாகி கடந்த வியாழக்கிழமை டெல்லி வந்தார். 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர் இந்தியாவுக்கு முதல் முறையாக வந்துள்ளார்.
7 நாள் இந்தியப் பயணத் தில் அவர் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு வர்த்தகம், மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். பின்னர் அவர் டெல்லியில் நிருபர்கள் சந்திப்பை நடத்தியது சர்ச்சையானது.
அதில் டெல்லியின் பெண் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் பதிவானது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகியின் ஆக்ரா பயணம் இன்று ரத்து செய்யப்பட்டது. அவர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்க்க இருந்தார். அவரது தாஜ்மகால் பயணத்துக்கான ரத்து குறித்து காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.






