பனிப்புயல் தாக்கம்; நியூயார்க், நியூவார்க் நகரங்களுக்கான ஏர் இந்தியா விமான சேவை 2 நாட்களுக்கு ரத்து


பனிப்புயல் தாக்கம்; நியூயார்க், நியூவார்க் நகரங்களுக்கான ஏர் இந்தியா விமான சேவை 2 நாட்களுக்கு ரத்து
x

அமெரிக்க கிழக்கு கடலோர பகுதியில் கடுமையான பனிப்புயல் தொடர்பான முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

ஏர் இந்தியா விமான நிறுவனம் தினசரி அடிப்படையில், டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும், டெல்லியில் இருந்து நியூவார்க் நகருக்கும் விமானங்களை இயக்குகிறது. வாரத்திற்கு சில நாட்களில் மும்பை நகரத்தில் இருந்து நியூவார்க் நகருக்குக்கும் விமானங்களை இயக்கி வருகிறது.

இந்த சூழலில், அமெரிக்க கிழக்கு கடலோர பகுதியில் கடுமையான பனிப்புயல் தொடர்பான முன்னறிவிப்பு வெளியான சூழலில், நாளை மற்றும் நாளை மறுநாள் (25, 26) என 2 நாட்களுக்கு நியூயார்க் மற்றும் நியூவார்க் ஆகிய நகரங்களுக்கான விமான சேவையை ஏர் இந்தியா விமான நிறுவனம் ரத்து செய்து உள்ளது.

இந்த பகுதிகளில் நாளை காலை முதல் திங்கட்கிழமை வரை விமான இயக்கத்தில் கடுமையான தாக்கம் இருக்கும். இதனால், நம்முடைய பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் சவுகரியம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, இந்த 2 நாட்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா விமான நிறுவனம், அதுதொடர்பான அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவை வார இறுதியில் தீவிர குளிரலை மற்றும் வரலாறு காணாத பனிப்புயல் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும். இதனால், 3-ல் 2 பங்கு மக்கள் பாதிக்கப்பட கூடும் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த பனிப்புயலால் ஏற்படும் பனி மற்றும் பனிப்படலம் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ இங்கிலாந்து வரையிலான 2 ஆயிரம் மைல்கள் நீளம் வரை பரவியிருக்கும்.

வார இறுதியில் பனிப்புயல் கிழக்கு நோக்கி பயணிக்கும். இந்த பனிப்புயல் சூழலால், மின் இணைப்புகள் பாதிக்கப்பட கூடும். இதன் விளைவால், லட்சக்கணக்கானோருக்கு சில நாட்களை வரை மின் விநியோகம் தடைபட கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த பனிப்புயலை எதிர்கொள்ள ஏதுவாக, அலபாமா, ஜார்ஜியா, லூசியானா, அர்கான்சாஸ், டென்னஸ்ஸீ, மேரிலேண்ட் உள்பட 15 மாகாணங்களில் அவசரநிலையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story