காற்று மாசு எதிரொலி; டெல்லியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு


காற்று மாசு எதிரொலி; டெல்லியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு
x

Image Courtesy : AFP

காற்று மாசு காரணமாக டெல்லியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, அரிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 432 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்று காலை அடர்ந்த மூடுபனி நிலவியது. டெல்லி விமான நிலையத்தில் ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்ததால், சில விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசு எதிரொலியாக டெல்லியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காற்று மாசு காரணமாக, அடுத்த அறிவிப்பு வரும் வரை டெல்லியில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story