‘காற்று மாசு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது’ - ஆய்வில் அதிர்ச்சி தகவல்


‘காற்று மாசு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது’ - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
x

இந்தியாவின் காற்று மாசு குறியீடு உலக சுகாதார மையத்தின் தர நிர்ணய அளவை விட 8 மடங்கு அதிகமாக உள்ளது.

புதுடெல்லி,

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், 2025 நிலவரப்படி இந்தியா 146 கோடி மக்கள் தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்ததாக சீனா, 142 கோடி மக்கள் தொகையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், 2060-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 165 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தனை பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்திய நாட்டில், சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது தவிர்க்க முடியாத சவாலாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. காற்று மாசு குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள சராசரி அளவுகளை விட, அதிகமான காற்று மாசு கொண்ட பகுதிகளிலேயே பெரும்பாலான இந்திய மக்கள் வாழ்ந்து வருவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவில் 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் PM2.5 செறிவு அதிகமாக இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

PM2.5 செறிவு என்பது காற்றில் உள்ள நுண்ணிய துகள்களின் அளவைக் குறிக்கிறது. இது காற்று மாசுபாட்டின் முக்கிய குறியீடாகும். இந்தியாவை பொறுத்தவரை இந்த குறியீடு உலக சுகாதார மையத்தின் தர நிர்ணய அளவை விட 8 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் சரசரியாக இந்தியர்களின் ஆயுட்காலம் சுமார் 3.5 ஆண்டுகள் குறைகிறது என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் காற்றின் தரத்தை சர்வதேச அளவீடுகளுக்கு இணையாக உயர்த்தினால் இந்திய மக்கள் தொகையில் சுமார் 46 சதவீதம் பேரின் ஆயுட்காலம் 1.5 ஆண்டுகள் வரை அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story