டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்

டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 'மிகவும் மோசமான' பிரிவில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் என்ற செயலி வெளியிட்ட அறிக்கையின்படி இன்று காலை 9 மணிக்கு டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 370-ஆக பதிவாகி உள்ளது. இதனால் டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது. சாந்தினி சவுக், ஆனந்த் விகார், முன்ட்கா, பவானா, நரேலா, வஜீர்பூர் உள்பட18-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு 400-க்கு மேல் பதிவாகி உள்ளன.
பொதுவாக 100-க்கு மேல் சென்றாலே அது மிதமான நிலையை தாண்டி மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்று அர்த்தம். ஆனால் டெல்லியில் இன்று காலை நிலவரப்படி காற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகி உள்ளது. காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.






