அருணாச்சலபிரதேசம்: பனியில் உறைந்த ஏரியில் மூழ்கி கேரள சுற்றுலா பயணிகள் இருவர் பலி

உறைந்த ஏரியில் நடந்து சென்று செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.
இட்டா நகர்,
கேரள மாநிலத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் அருணாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், அருணாச்சலபிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள சலா ஏரிக்கு 7 பேரும் சென்றுள்ளனர்.
சலா ஏரி பனியில் உறைந்து காணப்பட்டது. அப்போது, ஒரு இளைஞர் உறைந்த ஏரியில் நடந்து சென்று செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது, திடீரென ஏரியில் பனிப்படலம் உடைந்துள்ளது. இதனால் அந்த இளைஞர் உறைந்த ஏரிக்குள் விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக இளைஞர்கள் 6 பேரும் அந்த இளைஞரை காப்பாற்ற ஏரிக்குள் குதித்துள்ளனர்.
அப்போது, ஏரிக்குள் விழுந்த அந்த இளைஞர் நீந்தி கரையை அடைந்துள்ளார். ஆனால், அந்த இளைஞரை காப்பற்ற ஏரிக்குள் குதித்த 6 இளைஞர்களில் பிரகாஷ் (வயது 24), மாதவ் (வயது 26) ஆகிய 2 பேர் ஏரி நீரில் மூழ்கி மாயமாகினர். எஞ்சிய அனைவரும் கரையை அடைந்தனர். இதையடுத்து, ஏரியில் மூழ்கிய இரு இளைஞர்கள் குறித்து ராணுவம், போலீசார், மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நேற்று நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது ஏரியில் இருந்து பிரகாஷ் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, இன்று காலை நடைபெற்ற மீட்புப்பணியில் மாதவ்வின் உடலும் மீட்கப்பட்டது. உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்குப்பின் 2 பேரின் உடல்களும் சொந்த ஊரான கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






