ஆந்திராவில் ஓடும் ரெயிலில் கொள்ளை முயற்சி; போலீசாரை கண்டதும் திருடர்கள் தப்பியோட்டம்

போலீசார் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி இரண்டு முறை சுட்டனர்.
அமராவதி,
செகந்திராபாத்தில் இருந்து புவனேஸ்வர் வரை செல்லும் விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆந்திர மாநிலத்தின் பால்நாடு மாவட்டத்தில் உள்ள தும்மலா பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் ரெயிலின் அவசரகால சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நடுவழியில் நின்றது.
இது குறித்து விசாரிக்க ரெயிலில் பணியில் இருந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு அருகே சென்றனர். போலீசார் வருவதைப் பார்த்து 2 நபர்கள் ரெயிலில் இருந்து இறங்கி ஓடினர். மேலும் அவர்கள் போலீசார் மீது கற்களை தூக்கி வீசினர். போலீசார் தற்காப்புக்காக தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி இரண்டு முறை சுட்டனர். இருப்பினும் திருடர்கள் இருவரும் அருகில் இருந்த வயல்வெளிக்குள் புகுந்து ஓடி மறைந்தனர்.
இந்த சம்பவத்தால் அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. தப்பியோடிய நபர்கள் பீகார்-மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட திருட்டு கும்பலுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.






