அவுரங்காபாத் ரெயில் நிலைய பெயர் சத்ரபதி சம்பாஜிநகர் என மாற்றம்

மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சம்பாஜியை நினைவுகூரும் விதமாக இந்த பெயர் சூட்டப்பட்டது.
சம்பாஜிநகர்,
மராட்டியத்தில் உள்ள அவுரங்காபாத் நகர், முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் நினைவாக அந்த பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முந்தைய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மராட்டிய அரசு அவுரங்காபாத் நகரத்திற்கு சத்ரபதி சம்பாஜிநகர் என பெயர்மாற்றம் செய்து உத்தரவிட்டு இருந்தது. மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சம்பாஜியை நினைவுகூரும் விதமாக இந்த பெயர் சூட்டப்பட்டது.
இதைதொடர்ந்து அவுரங்காபாத் ரெயில் நிலையத்திற்கும் பெயர் மாற்றம் செய்யும் நடைமுறைகள் நடைபெற்று வந்தது. அதன்படி பா.ஜனதா தலைமையிலான தற்போதைய அரசு அவுரங்காபாத் ரெயில் நிலையத்திற்கு சத்ரபதி சம்பாஜிநகர் ரெயில் நிலையம் என பெயரை மாற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டு உள்ளது.
அவுரங்காபாத் ரெயில் நிலையம் 1900-ம் ஆண்டில், ஐதராபாத்தின் 7-வது நிஜாம் மிர் உஸ்மான் அலிகானால் திறந்து வைக்கப்பட்டது. இந்த ரெயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைப்பை கொண்டுள்ளது.
மேலும் சத்ரபதி சம்பாஜிநகர் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற அஜந்தா குகைகள், எல்லோரா குகைகள் மற்றும் பீபி கா மக்பரா, அவுரங்காபாத் குகைகள் என பல்வேறு சுற்றுலா தலங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.






