தொண்டையில் கோழிக்கறி சிக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

கோழிக்கறி என்பதால் மிகுந்த ஆசையோடு அவசர அவசரமாக சாப்பிட்டுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 45). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இவர், தனது மனைவியிடம் கோழிக்கறி குழம்பு வைப்பதற்காக சிக்கன் வாங்கி கொடுத்துள்ளார். அதன்படி, அவரது மனைவி கோழிக்கறி குழம்பு வைத்து விட்டு கணவருக்காக காத்திருந்தார். அதிக பசியோடு வந்த சுரேந்தர், கோழிக்கறி என்பதால் மிகுந்த ஆசையோடு அவசர அவசரமாக சாப்பிட்டுள்ளார்.
அப்போது, அவரது தொண்டையில் கோழிக்கறி சிக்கி கொண்டது. அவர், எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் உணவுக்குழாய் வழியாக சிக்கன் வயிற்றுக்குள் செல்லவில்லை. தொண்டையில் இருந்து வெளியேவும் எடுக்கமுடியவில்லை.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். சமீபத்தில், இதே மாவட்டத்தில் ஒருவர் முட்டை சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அவசர அவசரமாக மாமிச உணவுகளை சாப்பிடுவர்களுக்கு இந்த சம்பவங்கள் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.






