மேற்கு வங்காளம்: காதலியை கத்தியால் குத்திய சென்னை நபர் - அதிர்ச்சி சம்பவம்

கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா,
சென்னையை சேர்ந்த நபர் பிரதீப் குமார் செல்வராஜ் (வயது 40). இவரும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவை சேர்ந்த 38 வயதான பெண்ணும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், காதலர்கள் இருவரும் நேற்று கொல்கத்தாவின் பிபி கங்குலி தெருவில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். ஓட்டல் அறையில் வைத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப் தனது காதலியை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த அப்பெண் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு விரைந்து சென்ற ஓட்டல் ஊழியர்கள் பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார், காதலியை கத்தியால் குத்திய பிரதீப்பை கைது செய்தனர். கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






