தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்த காங்கிரஸ்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
டெல்லி,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தற்போதைய நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. திமுக அணி, அதிமுக - பாஜக அணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.
இந்நிலையில், தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கான தேர்தல் பார்வையாளர்களாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்நிக், உத்தம் குமார், குவாசி முகமது நிசாமுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 3 பேரும் புதுச்சேரிக்கும் தேர்தல் பார்வையாளர்களாக செயல்பட உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியை போன்று சட்டசபை தேர்தல் நடைபெறும் அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது.






