டெல்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது
டெல்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
Published on

புதுடெல்லி

டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.

சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். டெல்லியில் தொடர் வாகன தணிக்கை நடந்து வருகிறது. இந்த சோதனையில் பல இடங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன விதி மீறல்களுக்காக 417 அபராதங்கள் விதிக்கப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 3 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ராணுவத்தில் பயன்படுத்தக்கூடியவை. அந்த தோட்டாக்கள் எங்கிருந்து வந்தன என்ற விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தற்கொலை தாக்குதல் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த தற்கொலை தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி கொடுத்தவர்தான் அமீர் ரஷீத் அலி ஆவார். இவர்தான் தற்கொலை தாக்குதலை திட்டமிட்டு வடிவமைத்தவர் என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரை வாங்கி கொடுப்பதற்காக இவர் காஷ்மீரில் இருந்து டெல்லி வந்துள்ளார். இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 73 பேரிடம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. சம்பவம் நடந்த டெல்லி, வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்ட அரியானா மற்றும் உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு சோதனைகளும், விசாரணைகளும் நடந்து வருகின்றன. இதனிடையே, கார் வெடிப்பு வழக்கில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com