டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - மேலும் 4 பேர் கைது


டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2025 4:05 PM IST (Updated: 20 Nov 2025 5:56 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவத்தில் பலியான டாக்டர் உமர் கடந்த 10-ந் தேதி அரியானாவில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு வந்த பாதைகளில் போலீசார் இடைவிடாமல் விசாரித்து வருகிறார்கள். குறிப்பாக அவர் எங்கெல்லாம் நின்றாரோ? அங்கு விசாரணை நடத்தப்படுகிறது. டெல்லியில் தொடர் வாகன தணிக்கை நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 73 பேரிடம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. சம்பவம் நடந்த டெல்லி, வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்ட அரியானா மற்றும் உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு சோதனைகளும், விசாரணைகளும் நடந்து வருகின்றன. இதற்கிடையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்.ஐ.ஏ. விடுவித்தது.

அதே சமயம், ஏற்கனவே 2 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத், ஷோபியன் பகுதியை சேர்ந்த முப்தி இர்பான் அகமது வாகே, புல்வாமாவை சேர்ந்த டாக்டர் முசாமில் ஷகீல் கனாய் மற்றும் அனந்த்நாக் பகுதியை சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story