டெல்லி கார் வெடிப்பு: ‘அவர் ஒருபோதும் புர்கா அணிய மாட்டார்..’ - கைதான பெண் டாக்டரின் முன்னாள் கணவர் பேட்டி

ஷாஹீன் வெளிநாட்டிற்கு சென்று வாழ ஆசைப்பாட்டர் என்று அவரது முன்னாள் கணவர் டாக்டர் சபார் ஹயாத் தெரிவித்துள்ளார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை எதிரே நேற்று முன்தினம் இரவு ஹூண்டாய் ஐ-20 கார் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் என்பவர் காஷ்மீரைச் சேர்ந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பெண் டாக்டர் காஷ்மீர் அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து லக்னோவில் உள்ள ஷாஹீன் வீட்டிலும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து பெண் டாக்டரின் குடும்பத்தினரிடமும் அதிகாரிகள் விசாரித்தனர். இது குறித்து ஷாஹீனீன் சகோதரர் சோயப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஷாஹீன் எங்கள் குடும்பத்தினருடன் சுமார் 4 ஆண்டுகளாக பெரிதாக தொடர்பில் இல்லை. அவ்வப்போது அவரை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்போம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை விசாரிப்பது இயல்புதானே? அதுபோல்தான் அவரிடம் நாங்கள் பேசி வந்தோம். லக்னோவில் உள்ள ஐ.ஐ.எம். ரோடு பகுதியில் ஷாஹீன் வசிப்பதாக எனக்கு தெரியுமே தவிர, அவரது இருப்பிடத்திற்கு நான் ஒருமுறை கூட சென்றது கிடையாது. அவர் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டதாக எந்த அடையாளமும் எங்களுக்கு தெரியவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகளை எங்களால் நம்பவே முடியவில்லை.

அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்து, அமைதியான முறையில் கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். எங்கள் குடும்பத்தினரை கடுமையான முறையில் அவர்கள் நடத்தவில்லை. எனது சகோதரி எங்களுடன் பேசுவதை எப்போது நிறுத்தினார்? என்றுதான் அவர்கள் விசாரித்தனர் என அவர் தெரிவித்தார்.

கைதான பெண் டாக்டர் ஷாஹீனுக்கு கடந்த 2003-ம் ஆண்டு டாக்டர் சபார் ஹயாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் 2012-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் ஷாஷீன் தற்போது கைதாகியுள்ள சூழலில், அவரது முன்னாள் கணவர் சபார் ஹயாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எங்கள் திருமண வாழ்க்கை நல்ல முறையில் இருந்தது. எங்கள் குழந்தைகளுக்கு ஷாஹீன் நல்ல தாயாக இருந்தார். அவர்களின் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

அவர் ஒருபோதும் புர்கா அணிந்து நான் பார்த்ததில்லை. எங்கள் திருமண சடங்குகளின்போது மட்டும் புர்கா அணிந்திருந்தார். அவர் ஒருமுறை என்னிடம் ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிற்கு செல்லலாம் என்றும், அங்கு நல்ல சம்பளமும், சிறப்பான வாழ்க்கை முறையும் கிடைக்கும் என்றும் கூறினார். ஆனால் எங்கள் குழந்தைகளின் கல்வி, வேலை, உறவினர்கள் என அனைத்தும் இந்தியாவில் இருக்கும்போது, வெளிநாட்டிற்கு சென்றால் தனிமையாக உணர்வோம் என்று கூறி அவரது விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன்.

ஆனால் ஷாஹீன் எதற்காக விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் என்பது எனக்கு தெரியவில்லை. எங்களுக்கு இடையில் எந்த பிரச்சினையோ, சண்டையோ இருந்ததில்லை. விவாகரத்துக்கு பிறகு அவருடன் நான் தொடர்பில் இல்லை. நாங்கள் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் எந்த பயங்கரவாத தொடர்பும் அவருக்கு இல்லை. ஆனால் அதன் பிறகு அவருக்கு ஏதேனும் தொடர்பு ஏற்பட்டிருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com