ராகுல் காந்தி, சோனியாவுக்கு எதிரான வழக்கில் திருப்பம்: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை ஏற்க கோர்ட்டு மறுப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்துவிட்டது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுலுக்கு எதிராக, நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரோஸ் அவென்யூ கோர்ட்டு நிராகரித்துள்ளது. சட்டவிரோதப் பணிப்பரிவர்த்தனை வழக்கு எந்த விசாரணை அமைப்பின் அடிப்படையிலும் நடத்தப்படாமல், தனி நபர் அளித்த புகார் அடிப்படையிலானது என கோர்ட்டு நிராகரித்துவிட்டது.
காவல்துறை போன்ற அமைப்பின் விசாரணையின்படி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. அதற்கு மேல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் என முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் குறித்து கோர்ட்டு சுட்டிக்காட்டியிருக்கிறது.இந்த வழக்கில், சமீபத்தில்தான், டெல்லி காவல்துறை நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்திருக்கிறது.
ஆனால், அமலாக்கத் துறை சார்பில் இதுவரை நடைபெற்ற விசாரணை தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் நடந்துள்ளது. அதாவது, நேஷனல் ஹெரால்டு நிறுவன சொத்துகளை அபகரிக்க முயன்றதாக சுப்பிரமணிய சுவாமி மனு கொடுத்திருக்கிறார்.அந்த மனுவில், நேஷனல் ஹெரால்டு நிறுவன சொத்துகளை மிகக் குறைந்த பணத்தைக் கொடுத்து அபகரிக்க முயன்றதாக சோனியா, ராகுல் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த மனு அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்துள்ளது என குறிப்பிட்ட கோர்ட்டு, குற்றப்பத்திரிகையை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.






