டிஜிட்டல் கைது மோசடி; குடிமக்களுக்கு ஒரு மோசமான அச்சுறுத்தல் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

காவல்துறையை பயமுறுத்தும் அமைப்பாக இல்லாமல், ஆதரவிற்கான அமைப்பாக மக்கள் பார்க்க வேண்டும் என திரவுபதி முர்மு தெரிவித்தார்.
புதுடெல்லி,
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகள் குழுவினர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர். இந்த நிகழ்வின்போது ஜனாதிபதி ஆற்றிய உரையில் அவர் கூறியிருப்பதாவது;-
“உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு இந்தியா. மேலும் நமது பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் நமக்கு அதிக அளவில் பொது மற்றும் தனியார் முதலீடுகள் தேவை.
எந்தவொரு மாநிலத்திலோ அல்லது பிராந்தியத்திலோ முதலீட்டை ஈர்ப்பதற்கு சட்டம் ஒழுங்கு மிகவும் முக்கியமானதாகும். முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்புகளைப் போலவே, காவல் பணியும் மிக முக்கியமானது.
காவல் பணியில் தொழில்நுட்பத்தின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, 'டிஜிட்டல் கைது' என்ற சொற்றொடரைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்திருக்கும். ஆனால் இன்று, ‘டிஜிட்டல் கைது' மோசடி, குடிமக்களுக்கு ஒரு மோசமான அச்சுறுத்தலாக இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுத் தளத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இது காவல் பணியையும் பாதிக்கப் போகிறது. தவறான நோக்கத்துடன் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவர்களை விட, நீங்கள் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னிலையில் இருக்க வேண்டும்.
இந்தியாவை ஆட்சி செய்த காலனித்துவ சக்திகள், தங்கள் சொந்த நாடுகளில் குடிமக்களின் பங்களிப்புடன் காவல் அமைப்புகளை உருவாக்கின. ஆனால் அவர்களின் காலனிகளாக இருந்த இந்தியா போன்ற நாடுகளில் பயம் மற்றும் அவநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட காவல் அமைப்புகளை உருவாக்கினர்.
காவல் பணிகளில் காலனித்துவ ஆதிக்கத்தை நீக்க செயல்முறை ஐ.பி.எஸ். அல்லது இந்திய காவல் பணியை உருவாக்கியதில் இருந்து தொடங்கியது. இது சேவையை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை ஆகும். பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் காவல்துறையை ஆதரவிற்கான அமைப்பாக பார்க்க வேண்டும், பயமுறுத்தும் அமைப்பாக அல்ல.
ஒரு காவல்துறை அதிகாரி கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கையாளுகிறார், இது உங்கள் உணர்வுகளை பாதித்து, உங்கள் மனிதாபிமானத்தை மழுங்கடிக்கக்கூடும். ஒரு திறமையான அதிகாரியாக மாறும்போது, உங்கள் இரக்க குணத்தை அப்படியே வைத்திருக்க நீங்கள் ஒரு முயற்சி செய்ய வேண்டும்.
நாட்டின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் வடிவமைத்த நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதிலும் வலுப்படுத்துவதிலும் இந்திய காவல் பணி மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளது. ஐ.பி.எஸ். உள்ளிட்ட அனைத்து அகில இந்திய சேவைகளும், நமது கூட்டாட்சி கட்டமைப்பை ஒன்றாக வைத்திருப்பதிலும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் எங்கு நியமிக்கப்பட்டாலும் தேசிய கண்ணோட்டத்துடன் பணியாற்றுகிறார்கள்.
174 பயிற்சிப் பணியாளர்களைக் கொண்ட இந்த குழுவில் 62 பெண் ஐ.பி.எஸ். பயிற்சிப் பணியாளர்கள் உள்ளனர். மேலும், வரும் காலங்களில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






