டிஜிட்டல் கைது மோசடி: முதியவரிடம் ரூ.50 லட்சம் பணம் பறித்த இருவர் கைது

மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அரசு அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றியுள்ளனர்.
மும்பை,
தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த முதியவர் ஒருவர், கடந்த 9-ந்தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான அந்த முதியவரை டிஜிட்டல் கைது மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அரசு அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றியுள்ளனர். கடந்த செப்டம்பர் 11-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த முதியவருக்கு பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, மோசடிக்காரர்கள் அரசாங்கத்தின் முத்திரையுடன் கூடிய எப்.ஐ.ஆர். நகல்கள், அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களைக் காட்டியுள்ளனர். இவ்வாறு முதியவரை 10 நாட்களுக்கு மேலாக மிரட்டி, அவரிடம் இருந்து சுமார் ரூ.50 லட்சம் பணத்தை மோசடிக்காரர்கள் பறித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் முதியவரை தொடர்பு கொள்ளவில்லை.
இது ஒரு மோசடி வேலை என்பதை உணர்ந்து கொண்ட முதியவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பணத்தை பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், விசாரணையின் முடிவில் ரவி அனந்தா அம்போரே(35) மற்றும் சந்திரகாந்த் ஜாதவ்(37) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இதுபோல் மேலும் பல்வேறு நபர்களிடம் பணம் பறித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






