பயங்கரவாதிகளின் பிடியில் டாக்டர்கள், படித்தவர்கள்..? உயிர்த்தியாகம் என கூறும் உமரின் வீடியோ உலகிற்கு தெரிவிப்பது என்ன?

ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் டாக்டர்கள், கல்வியறிவு படைத்தவர்களை தன்பக்கம் இழுக்கும் வேலையை செய்வது வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை மற்றும் மெட்ரோ அருகே கடந்த 10-ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் உன் நபி என்பதும், இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த டெல்லி கார் வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உமர் முகமது என்ற உமர்-உன்-நபி வீடியோ ஒன்றில் ஆங்கிலத்தில் பேசியுள்ள அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், தற்கொலை தாக்குதலை அவர் நியாயப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
வீடியோவில் உமர் கூறிய தகவல்
அவர் பேசும்போது, ஒரு விசயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. இதனை தற்கொலை தாக்குதல் என முத்திரை குத்தியுள்ளனர். அது உயிர்த்தியாகத்திற்கான நடவடிக்கை. இஸ்லாமில் அறியப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு முரண்பாடுகள், பல்வேறு வாக்குவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன என கூறினார்.
உயிர்த்தியாகத்திற்கான நடவடிக்கையின்படி, ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நபர் ஒருவர் தான் சாக போகிறோம் என தெரிந்தே செல்கிறார். எப்போது, எங்கே அவர்கள் சாக போகிறார்கள் என்பது ஒருவராலும் சரியாக கணிக்க முடியாது. அது விதியாக இருக்கும் பட்சத்தில், அது நடந்தேறும். அதனால் மரணத்திற்கு அஞ்ச கூடாது என்று கூறுகிறார்.
இஸ்லாமில் தற்கொலை தடை செய்யப்பட்ட ஒன்று. எனினும், வீடியோவில், தற்கொலை தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசுவது தெரிகிறது.
வீடியோ உலகிற்கு கூறும் தகவல்
அவர் முற்றிலும் தீவிரவாதத்திற்குள் ஆட்கொள்ளப்பட்டு விட்டார். அமைதியான முறையில், நன்றாக பக்குவப்பட்ட நிலையிலான நபர், தீங்கு தரும் ஒரு செயலை நியாயப்படுத்துவது வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. இந்தியாவில் பயங்கரவாதத்தின் புதிய முகம் வெளிப்பட்டு உள்ளது. இதன்படி, கல்வியறிவு பெற்றவர்கள், தீவிரவாதத்திற்கு இழுக்கப்படுவதுடன், நன்றாக திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.
டெல்லி கார் வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் கவனத்துடன், திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு உள்ளது. அது, வெடிகுண்டுகளை கொண்டு செல்லும்போது தவறுதலாக வெடிக்க செய்யப்பட்டு இருக்கும் என்ற யூகங்களை புறம் தள்ளியுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள், தற்போது டாக்டர்கள் போன்ற அதிக கல்வியறிவு படைத்தவர்களை தன்பக்கம் இழுக்கும் வேலையை செய்வது வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
அரியானாவின் பரீதாபாத் நகரில் இந்த மாத தொடக்கத்தில், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஜ்வாத்-உல்-ஹிந்த் போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவை கண்டறிந்து உள்ளோம் என ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட வெடிபொருட்களையும் அவர்கள் பறிமுதல் செய்திருந்தனர். அன்றைய தினமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பிற வெளிநாடுகளில் இருந்து செயல்பட கூடியவர்களுடன், பயங்கரவாத செயலுக்கு இழுக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் போன்ற படித்தவர்கள் தொடர்பில் உள்ளனர். இதுபோன்று புதிதாக, படித்தவர்கள் கொண்ட பயங்கரவாத சூழலியல் உருவாகி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த பயங்கரவாத குழு, ஒருங்கிணைத்தல், நிதி பகிர்வு மற்றும் ஆயுத தளவாடங்களை கொண்டு செல்வதற்கு என்கிரிப்டட் எனப்படும் குறியீட்டு வழியேயான தகவல் பரிமாற்றங்களை கொண்டு உள்ளது. சமூக நலனிற்காக, தொண்டு செயலுக்காக என கூறிக்கொண்டு படித்தவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழியேயான நெட்வொர்க்குகள் கண்டறியப்பட்டு உள்ளன என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது என்றும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக அளவில் நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் முன்புபோல், படிக்காத, வேலையில்லாத இளைஞர்களை குறி வைத்து இந்த நெட்வொர்க்கிற்குள் இழுக்கும் நிலை போய், தற்போது இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பல படித்தவர்களே பயங்கரவாத குழுக்களின் இலக்காக கொள்ளப்படும் அபாயம் அதிகரித்து காணப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது.






