"அறிவு இல்லையா?" - பொதுவெளியில் கலெக்டரிடம் கோபத்தை வெளிப்படுத்திய மந்திரி

தெலுங்கானாவில் கலெக்டரிடம் மந்திரி கோபமாக பேசியது சர்ச்சையாகியுள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கரீம்நகரில் அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பா.ஜ.க, எம்பி பண்டி சஞ்சய் குமார் மற்றும் மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் ஆகியோர் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தண்ணீர் விநியோக முறையைத் திறந்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது, மாநில வருவாய் துறை மந்திரி பொங்குலேடி சீனிவாச ரெட்டி, காவல்துறையினரால் பலமுறை ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்டு வருத்தமடைந்த அவர், கரீம் நகர் மாவட்ட பெண் கலெக்டர் பமீலா சத்பதியை பார்த்து, உனக்கு பொது அறிவு இல்லையா? என்ன செய்கிறாய்? என்ன முட்டாள்தனம்? போலீஸ் கண்காணிப்பாளர் எங்கே?' என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
கலெக்டர் நிலைமையை விளக்க முயன்றார். ஆனால் மந்திரியோ, தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதன் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. கலெக்டரிடம் மந்திரி கோபமாக பேசியதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.






