குடிபோதையில் கல்லூரி மாணவியை தாக்கிய கார் டிரைவர் கைது


குடிபோதையில் கல்லூரி மாணவியை தாக்கிய கார் டிரைவர் கைது
x

டிரைவர் மதுகுடித்துவிட்டு காரை ஓட்டியதாக மாணவி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், பெங்களூருவில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த மாணவி, மேற்கு வங்காளத்திற்கு விமானத்தில் செல்ல டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி, கடந்த 20-ந் தேதி தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக வாடகை காரை அவர் முன்பதிவு செய்து சென்றார். அந்த காரை கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அஜாஸ் ஓட்டினார். விமான நிலையத்தையொட்டி இருக்கும் சுங்கச்சாவடியில் கட்டணம் கொடுக்காமல் இருக்க, மாற்று பாதையில் காரை அஜாஸ் ஓட்டிச் சென்றார்.

இதுபற்றி மாணவி கேட்டதுடன், காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறினார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. பின்னர் டிரைவர் காரை நிறுத்தியதும், மற்றொரு வாடகை காரை முன்பதிவு செய்து மாணவி செல்ல முயன்றார். அப்போது அந்த மாணவியை அஜாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அஜாசின் காரில் இருந்த தனது உடைமைகளை கூட எடுக்காமல் மற்றொரு காரில் ஏறி மாணவி சென்று விட்டார். டிரைவர் அஜாஸ் மதுகுடித்துவிட்டு காரை ஓட்டியதாக மாணவி குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுகுறித்து விமான நிலைய போலீஸ் நிலையத்தில் மாணவியின் உறவினர் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜாசை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story