கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிக்கு ரிலையன்சில் வேலை

அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி கபில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
2009 பிரிவு, இந்திய வருவாய்ப் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியாக பணியை தொடங்கிய கபில் ராஜ் 16 ஆண்டுகள் மத்திய அரசுப் பணியாற்றி பின் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஜூலை 17 ஆம் தேதி ராஜினாமா செய்தார். உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான கபில் ராஜ், பி.டெக். மின்னணுவியல் பட்டதாரி ஆவார். இவர் 8 ஆண்டுகள் அமலாக்கத் துறையில் பணியாற்றிய நிலையில், புது டெல்லியில் உள்ள சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) புலனாய்வு பிரிவின் கூடுதல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்த கபில் ராஜ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் முன்னாள் தலைவரும் ஐஆர்எஸ் அதிகாரியுமான வி.கே. சௌத்ரி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இணைந்தார். அவருக்கு சுயாதீன இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு மற்றும் பல துறைகளை உள்ளடக்கியது.
கபில் ராஜ், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் கைது செய்ததில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு.






