கேரளாவில் உடல்நலம் சரியில்லாத மனைவியை கொன்றுவிட்டு முதியவர் தற்கொலை

அதிகாலை 3 மணிக்கு பாசுரன் ஆசாரி ஆஸ்பத்திரியின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் கரகுளத்தை சேர்ந்தவர் பாசுரன் ஆசாரி (வயது 73). இவருடைய மனைவி ஜெயந்தி (63) கடந்த 9 நாட்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பட்டத்திலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஜெயந்தி சிகிச்சை பெற்று வந்தார். அவரை பாசுரன் ஆசாரி உடனிருந்து கவனித்தார்.
உடல்நிலை சரியில்லாமல் மனைவி அவதிப்படுவதை பார்த்து பாசுரன் ஆசாரி மிகுந்த வேதனையில் இருந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு பாசுரன் ஆசாரி அதே ஆஸ்பத்திரியின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாசுரன் ஆசாரி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஜெயந்தியும் மின்வயரால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து நர்சு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் போலீசார் விரைந்து வந்து நடத்திய விசாரணையில், உடல்நிலை சரியில்லாமல் அவதிக்குள்ளான மனைவியை பாசுரன் ஆசாரி கொன்று விட்டு மாடியில் இருந்து கீழே குதித்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






