தேர்தல் ஆணையம் மோசடிக்கு துணை நின்றது; எங்களிடம் இருந்து தப்ப முடியாது - ராகுல் காந்தி

Image Courtesy : PTI
மோசடியை நிரூபிக்க தங்களிடம் 100 சதவீத உறுதியான ஆதாரம் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து, இரு அவைகளிலும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பற்றி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி வருகின்றன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி 3 நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்நிலையில், 4-வது நாளாக அவை இன்று கூடியது. இரு அவைகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் உடனடியாக அவையை ஒத்திவைத்து விட்டு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதிக்க கோரியும் அவையில் நோட்டீஸ் அளித்தனர்.
ஆனால், அவர்களுடைய நோட்டீஸ்கள் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்றும் அவை நடவடிக்கைகள் முடங்கின. மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கர்நாடகாவில் ஒரு இடத்தில் தேர்தல் ஆணையம் மோசடிக்கு துணை நின்றது என்பதை நிரூபிக்க எங்களிடம் 100 சதவீத உறுதியான ஆதாரம் உள்ளது. நாங்கள் குறிப்பிட்ட ஒரு தொகுதியை கவனித்தபோது இதை கண்டுபிடித்தோம். பல தொகுதிகளிலும் இப்படிதான் நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஒரு தொகுதியில் 45, 50, 60, 65 வயது கொண்ட ஆயிரக்கணக்கான புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர். என்ன நடந்து கொண்டிருக்கிறது? தேர்தல் ஆணையம் வசமாக சிக்கிக் கொண்டது. தேர்தல் ஆணையத்திற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நீங்களோ, உங்கள் அதிகாரிகளோ எங்களிடம் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






