திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலென்ஸ் அதிகாரி மர்ம மரணம்

உண்டியல் காணிக்கை திருட்டு வழக்கின் முக்கிய நபராக கருதப்பட்ட அதிகாரியின் மரணம் பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல வருடங்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த சி.வி. ரவிக்குமார் என்பவர், கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்க டாலர்களை மறைத்து வெளியே கொண்டு வந்தபோது விஜிலென்ஸ் அதிகாரிகளால் பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்த டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை கையும் களவுமாக பிடித்த விஜிலென்ஸ் அதிகாரி சதீஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில், ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களை திருமலை தேவஸ்தானம் எழுதி வாங்கியது. பின்னர் சதீஷ் குமார் நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றார். அப்போதைய அதிகாரிகளின் சமரசத்தால், இந்த வழக்கு லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டு ரவிக்குமார் விடுவிக்கப்பட்டார். அரசியல் தலைவர்கள் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான மேலதிகாரிகளின் அழுத்தத்தால் தான் சமரசம் செய்ததாக அப்போது புகார்கள் எழுந்தன.
இவ்வாறு லோக் அதாலத்தை செய்த சமரசத்தை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை அணுகியதால் வழக்கு மீண்டும் மறுவிசாரணைக்கு வந்துள்ளது. லோக் அதாலத்தின் தீர்ப்பை சமீபத்தில் நீதிமன்றம் நிராகரித்ததுடன், மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. விரிவான விசாரணை நடத்தி, டிசம்பர் 2ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் சிஐடி டிஜிபி தலைமையிலான குழு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், வழக்கின் முக்கிய நபரான சதீஷ் குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். குண்டக்கல் ரெயில்வே காவல்நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அவர், இன்று காலையில் அனந்தபூர் மாவட்டம் தாடிப்பத்திரி அருகே கோமலி ரெயில் பாதை அருகில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உண்டியல் காணிக்கை திருட்டு வழக்கின் மறுவிசாரணை முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில், வழக்கின் முக்கிய நபராக கருதப்பட்ட முன்னாள் அதிகாரியின் மரணம் பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவரது முகம் மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. எனவே, அவர் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






