அரசியலில் இருந்து விலகுகிறேன்; லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு


அரசியலில் இருந்து விலகுகிறேன்; லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு
x

எல்லா பழிகளையும் நானே ஏற்று கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பீகார் சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. இந்த தேர்தலில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தள கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்து உள்ளதுடன், அவருடைய குடும்பத்தில் இருந்தும் விலகி இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதனை செய்யும்படி சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் என்னை கேட்டு கொண்டனர். எல்லா பழிகளையும் நானே ஏற்று கொள்கிறேன் என்றும் அதில் அவர் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக கட்சி நடத்தி வருவதுடன், குடும்பத்தில் இருந்தும் பிரிந்து இருக்கிறார். இந்நிலையில், ரோகிணி ஆச்சார்யா இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

1 More update

Next Story