பெங்களூரு லால்பாக் பூங்காவில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி - சித்தராமையா தொடங்கி வைத்தார்

சுதந்திர போராட்ட வீரர்கள் கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா ஆகியோரை மையப்படுத்தி மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
சுதந்திர போராட்ட வீரர்கள் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா ஆகியோரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் பெங்களூரு லால்பாக் பூங்காவில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் 1¾ லட்சம் பூக்களில் கித்தூர் கோட்டை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினத்தையொட்டி மலர் கண்காட்சி பெங்களூரு லால்பாக்கில் நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது சுதந்திர தினவிழா மலர் கண்காட்சிக்கு லால்பாக் பூங்கா கண்ணாடி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா ஆகியோரை மையப்படுத்தி மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட காட்சிகள் மலர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அவர்களின் சிலைகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இதில் குதிரையின் மீது வாளைப்பிடித்தபடி அமர்ந்திருக்கும் ராணி சென்னம்மா சிலையும், வாளை கையில் ஏந்தியபடி சங்கொள்ளி ராயண்ணா சிலையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன் 3¼ லட்சம் வண்ண வண்ண மலர்களால் கித்தூர் கோட்டை மாதிரி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 அடி உயரமும், 34 அடி சுற்றளவும் கொண்டதாக கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டை மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரம் பூக்களால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பச்சை, வெள்ளை, பழுப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலும் 1 லட்சத்து 50 ஆயிரம் டச்சு ரோஜா பூக்களாலும், 1½ லட்சம் கலப்பின செவ்வந்தி மலர்களாலும், 30 ஆயிரம் கொல்கத்தா செவ்வந்தி பூக்களாலும் இந்த கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பூக்களால் ஆன அலங்கார வளைவு, பறவைகளும் பார்த்து ரசிக்கும் படி உள்ளன. கண்ணாடி மாளிகையின் பின்பக்கத்தில் அதாவது மலர்களால் ஆன கித்தூர் கோட்டையின் பின்பகுதியில் ராணி அப்பக்கா தேவி, சென்னா பைராதேவி, பெலவரி மல்லம்மா, கெலாடி சென்னம்மா, வீரம்மாஜி, ஒனகே ஒபவ்வா ஆகியோரின் சிலைகளும் இடம்பெற்றுள்ளது.
இது 218-வது மலர் கண்காட்சி ஆகும். கித்தூர் ராணி சென்னம்மாவின் சமாதி இடமும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 6 திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வீடியோவாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இந்த கண்காட்சியில் 100 வகையான மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை பார்வையிட சிறுவர்கள், பெரியவர்களுக்கு தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு கட்டணமாக வார நாட்களில் ரூ.80-ம், வார இறுதி நாட்களில் ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறை 11 லட்சம் பேர் மலர் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 9.07 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். இதன் மூலம் ரூ.3.44 கோடி வருவாய் கிடைத்தது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கண்காட்சியை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
“மலர் கண்காட்சியில் கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா ஆகியோரின் வாழ்க்கை மையப்படுத்தப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக கித்தூர் ராணி சென்னம்மா 2 முறை போரிட்டார். அவை நடைபெற்று 200 ஆண்டுகள் ஆகிறது. 2-வது முறை போர் நடந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். சங்கொள்ளி ராயண்ணா அவரின் வலதுகரமாக செயல்பட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்.
தனக்கு உரிய ராணுவ படையை உருவாக்கி ஆங்கிலேயர்களுடன் கொரில்லா போரில் ஈடுபட்டார். அவருடைய பிறந்த நாள் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதி, அவரது நினைவு தினம் குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதி ஆகும். அதனால் இந்த 2 தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கித்தூர் ராணி சென்னம்மா மதச்சார்பற்ற மனநிலையை கொண்டிருந்தார்.”
இவ்வாறு அவர் கூறினார்.






