புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ராஜினாமா


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ராஜினாமா
x

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ராஜினாமா கடிதம் வழங்கினார்.

புதுச்சேரி,

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. மத்தியில் பாஜக அரசு இருப்பதால் புதுவையில் இந்த கூட்டணி ஆட்சியின் போதே மாநில அந்தஸ்து கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஆட்சியாளர்கள் மத்தியில் இருந்தது.

இதுதொடர்பாக ஏற்கனவே 16 முறை புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு. பொது நல அமைப்பினருடன் இணைந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தி, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கினார். இதைத் தொடர்ந்து சமூக அமைப்புகளுடன் சென்று டெல்லியில் அவர் போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில், கவர்னர்- அமைச்சரவை இடையே மோதலால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி இன்று காலையில் சட்டசபைக்கு வந்த நேரு அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், கேஎஸ்பி.ரமேஷ் ஆகியோர் வந்தனர். போராட்டத்தை முடித்து கொள்ள முதல்-அமைச்சர் கேட்டு கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட நேரு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தனது கோரிக்கை கடிதத்துடன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடாவிடம் அவர் வழங்கினார். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story