உலக அளவில் அதிக மதுபிரியர்கள் நாடாக இந்தியா

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் மதுபானங்கள் பயன்படுத்துவது 7 சதவீதம் அதிகரித்து உள்ளது.
உலக அளவில் அதிக மதுபிரியர்கள் நாடாக இந்தியா
Published on

புதுடெல்லி,

மது என்பது மேலை நாட்டு கலாச்சாரமாக பார்க்கப்பட்டது. ஒரு காலத்தில் அங்குதான் ஆணும், பெண்ணும் மது குடிப்பார்கள். அது அவர்களின் கலாச்சாரமாகவே மாறிவிட்டது என்று நினைத் தோம்.

ஆனால் இப்போது மற்ற நாடுகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு மதுபானங்களை குடித்து மதுபிரியர்கள் நிறைந்த நாடாக இந்தியா மாறி வருகிறது என்பது ஜீரணிக்க முடியாத அளவில் நம்ப வேண்டிய சூழல் வந்துள்ளது. கொடிகட்டி பறக்கும் 20 நாடுகளில் உலக அளவில் மதுபான சந்தையில் ஆல்கஹால் நுகர்வு தொடர்பான ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.

தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்தியா மது வகைகள் பயன்பாட்டில் அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் மதுபானங்கள் பயன்படுத்துவது 7 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த காலக்கட்டத்தில் 44 கோடி லிட்டர் மதுபானங்களை குடித்து மொடாக் குடிகாரர்கள் நிறைந்த நாடு இந்தியா என்பதை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விஸ்கி விற்பனை 7 சதவீதம், வோட்கா 10 சதவீதம், ரம் 2 சதவீதம், ஜின் விற்பனை 3 சதவீதம் அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்திய தயாரிப்பு உயர்தரமாகவும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களும் எளிதில் வாங்கும் வகையில் விலை இருப்பதாகவும் குடிமகன்கள் பெருமிதப்பட்டார்களாம். இந்த ஆய்வு முடிவின்படி உலக அளவில் இந்தியா மது பிரியர்கள் நிறைந்த நாட்டில் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் குடிமகன்கள் குடித்து கொண்டாடினால் 2027-ல் ஜப்பானை முந்தி விடுவோம். 2033-ல் ஜெர்மனியையும் பின்னுக்கு தள்ளி உலக அளவில் 5-வது பெரிய மது விற்பனை நாடாக இந்தியா வளர்ந்து விடுமாம். இப்போது சீனா, அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய 4 நாடுகளும் மிகப்பெரிய மதுபான சந்தை நாடுகளாக இருக்கிறது.

குடிகெடுக்கும் குடி. குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்பதெல்லாம் குடித்ததும் மறைந்தும் மறந்தும் போகிறது. எல்லா துறைகளிலும் வளர்ந்து வருவதாக மார்தட்டி கொள்ளும்போது குடிப்பதிலும் வளர்ந்து வரும் நாடு என்று இனி மார்தட்டி கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com