‘நக்சல் பயங்கரவாதத்தில் இருந்து விரைவில் இந்தியா விடுதலை பெற உள்ளது’ - பிரதமர் மோடி

100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்சல் பயங்கரவாதத்தில் இருந்து விடுபட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பனாஜி,
கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார். அந்த வகையில், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற சிறப்பான வெற்றியை கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது;-
“நமது பாதுகாப்புப் படையினரின் வீரம் மற்றும் துணிச்சலால், கடந்த சில ஆண்டுகளில் நாடு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த மைல்கல் நக்சல் பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றியது. நக்சல்-மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து விரைவில் இந்தியா விடுதலை பெற உள்ளது.
2014-க்கு முன்பு, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 125 மாவட்டங்கள் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டன, கடந்த பத்தாண்டுகளில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளால் இந்த எண்ணிக்கை இப்போது வெறும் 11 மாவட்டங்களாகக் குறைந்துள்ளது. இந்த 11 மாவட்டங்களில், மூன்று மாவட்டங்கள் மட்டுமே அவர்களின் செயல்பாடு அதிகமாக உள்ளது.
100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இப்போது நக்சல் பயங்கரவாதத்தில் இருந்து விடுபட்டு, முதல் முறையாக சுதந்திரக் காற்றை சுவாசித்து, அற்புதமான தீபாவளியைக் கொண்டாடுகின்றன. ஒரு காலத்தில் அரசியலமைப்பு சட்டம் நக்சல் பயங்கரவாதத்தால் முடக்கப்பட்டிருந்த மாவட்டங்களில், இப்போது சுதேசி என்ற மந்திரம் எதிரொலிக்கிறது.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.






