இண்டிகோ நிறுவனம் இயல்புநிலைக்கு திரும்புகிறது - தலைமை செயல் அதிகாரி தகவல்

கோப்புப்படம்
விமான சேவை தற்போது சீராக உள்ளது என்று இண்டிகோ தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மும்பை,
நாட்டின் முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த 2-ந் தேதியில் இருந்து தனது சேவையில் குளறுபடிகளை சந்தித்து வருகிறது. விமானிகள் பணி நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இந்த நிலை ஏற்பட்டது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் தவித்தனர்.
இதையடுத்து இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, பயணிகளின் பரிதவிப்பை குறைக்க உடனடியாக விமான சேவைகளை சீரமைக்க உத்தரவிட்டது. நிலைமை சீராகும் வரை விமானிகளின் பணிநேர கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்தது. அதேபோல இண்டிகோ நிறுவன விமானங்கள் ரத்து காரணமாக மற்ற விமானங்களின் டிக்கெட் கட்டணமும் பல மடங்கு உயர்ந்தது.
இதை கட்டுப்படுத்த மத்திய அரசு கட்டண உச்சவரம்பை கொண்டு வந்தது. இண்டிகோ நிறுவன விமானங்களின் செயல்பாடுகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இண்டிகோ நிறுவனம் சனிக்கிழமை வரை விமான ரத்து மற்றும் தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.610 கோடி வரை திரும்ப கொடுத்து உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் நேற்று ஒரு வீடியோ அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் கூறுகையில், “டிசம்பர் 10-ந் தேதி முதல் 15-ந் தேதிக்குள் இயல்புநிலை திரும்பும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களாக விமான சேவை அதிகரித்து வருகிறது. அதனால் இண்டிகோ தனது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. விமான சேவை சீராக உள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பயணிகளுக்கு பயண கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்பட்டுள்ளது. நாள்தோறும் இப்பணி நடந்து வருகிறது. விமான நிலையங்களில் தவித்த பயணிகள், வீடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்” என்று அவர் கூறியுள்ளார்.
அதே சமயத்தில், 8-வது நாளாக நேற்று இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 180 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.






