இஸ்லாம்பூர் ஊர் பெயர் ஈஸ்வர்பூர் என மாற்றம் - மராட்டிய மாநில அரசு அறிவிப்பு

Image Courtesy : PTI
பெயர் மாற்றம் தொடர்பான மராட்டிய மந்திரிசபையின் முடிவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது.
மும்பை,
சாங்கிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் ஊரின் பெயரை ஈஸ்வர்பூர் என மாற்றவேண்டும் என இந்துத்வா அமைப்பான சிவ் பிரதிஸ்தான் வலியுறுத்தி வந்தது. மேலும் இது தொடர்பாக சாங்கிலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிவ் பிரதிஸ்தான் தலைவர் சம்பாஜி பிடே, கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை ஓயமாட்டேன் என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் இஸ்லாம்பூரின் பெயரை ஈஸ்வர்பூர் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மராட்டிய அரசு நேற்று அறிவித்தது. மாநில சட்டசபை கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்து சட்டசபையில் உணவு மற்றும் வினியோகத்துறை மந்திரி சகன் புஜ்பால் கூறியதாவது;-
"மந்திரி சபை கூட்டத்தில் பெயர் மாற்றம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது. மந்திரிசபை முடிவை மத்திய அரசின் ஒப்புதலுக்காக மாநில அரசு அனுப்பும். இந்த பெயர் மாற்றம் தொடர்பாக இஸ்லாம்பூரை சேர்ந்த சிவசேனா தலைவர் ஒருவர் விடுத்த கோரிக்கை 1986-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






