

புதுடெல்லி,
முன்னாள் சர்வதேச பேட்மிண்டன் வீராங்கனை அபந்திகா டெகா, அகில இந்திய நீதிபதிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த போட்டி தொடக்க விழா டெல்லி தியாகராஜ் விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் தங்களின் வயதுக்கு ஏற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்று அதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். நீண்ட பணி நேரத்தினால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற பொழுதுபோக்கு அவசியமானது. இந்த பேட்மிண்டன் போட்டியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்பது, அவர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து அக்கறை செலுத்துவதை காட்டுகிறது என்று தெரிவித்தார்.