கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்:  சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 7 Oct 2025 1:21 PM IST (Updated: 7 Oct 2025 1:30 PM IST)
t-max-icont-min-icon

சிபிஐ விசாரணை கோரி பாஜக நிர்வாகி உமா தாக்கல் செய்த மனுவை அக்டோபர் 10ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது

சென்னை,

கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி உமா தாக்கல் செய்த இந்த மனுவை விசரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, வரும் 10ம் தேதி விசாரிக்க உள்ளது. மேல் முறையீட்டு மனுவில், விஜய் பிரசாரத்திற்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், கூடுதல் இழப்பீடு கோரிய மனுக்கள் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதை கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய போலீஸாரே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. போலீஸ் விசாரணை தொடக்க நிலையில் தான் உள்ளது. சிபிஐ விசாரணை கோரும் மனுதாரர்களுக்கும் கரூர் சம்பவத்துக்கும் தொடர்பில்லை. மனுதாரர்கள் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. தற்போதைய சூழ்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டனர்.

கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரணையை நடத்தி வருகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story