கேரளாவில் போலீஸ் வாகனம் மீது ஜீப் கொண்டு மோதிய நபர் தென்காசியில் கைது

கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைப்பேன் என மிரட்டினார்.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் படவூர் கிராமத்தில் கடந்த 19ம் தேதி கோவில் கொடை விழா நடைபெற்றது. கோவில் கொடைவிழாவில் சில விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. அந்த போட்டிகளில் பங்கேற்க அதே கிராமத்தை சேர்ந்த தேவன் என்பவர் தனது செல்லப்பிராணி நாயை அழைத்து வந்துள்ளார்.
அப்போது, தேவனுக்கு கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் தேவனை வீட்டிற்கு செல்லுமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அவர் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைப்பேன் என மிரட்டினார்.
இதையடுத்து, போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தனது ஜீப்பை கொண்டு போலீசார் வாகனம் மீது 3 முறை மோதினார். இதில் வாகனத்தில் இருந்த 3 போலீசார் காயமடைந்தனர். போலீஸ் வாகனத்தின் மீது ஜீப்பால் மோதியப்பின் அங்கிருந்து தேவன் தப்பிச்சென்றுவிட்டார்.
தலைமறைவான தேவனை தேடிய போலீசார், அவர் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் பதுங்கி இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து நேற்று தென்காசிக்கு விரைந்து சென்ற கேரள போலீசார் தேவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தேவனை கேரளாவுக்கு அழைத்து சென்ற போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.






