புனே விமான நிலைய எல்லைக்குள் பல மாதங்களாக சுற்றித் திரிந்த சிறுத்தை சிக்கியது


புனே விமான நிலைய எல்லைக்குள் பல மாதங்களாக சுற்றித் திரிந்த சிறுத்தை சிக்கியது
x

விமான நிலைய எல்லைக்குள் இருக்கும் சுரங்கப் பாதைக்குள் சிறுத்தை நுழைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள விமான நிலையத்தை சுற்றி மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அங்கிருந்து தப்பி வந்த சிறுத்தை ஒன்று விமான நிலைய எல்லைக்குள் நுழைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி சிறுத்தையை சிலர் பார்த்துள்ளனர். ஆனால் அதன் பிறகு சிறுத்தை எங்கு சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பிறகு நவம்பர் 19-ந்தேதி மீண்டும் விமான நிலைய எல்லைக்குள் சிறுத்தை தென்பட்டது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. சி.சி.டி.வி. கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, விமான நிலைய எல்லைக்குள் இருக்கும் சுரங்கப் பாதைக்குள் சிறுத்தை நுழைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த சுரங்கப் பாதையின் நுழைவு வாயில் மூடப்பட்டது. சிறுத்தையை பிடிக்கும் இந்த நடவடிக்கையில் 30 பேர் அடங்கிய குழு களமிறங்கியது. அவர்கள் சுமார் 80 அடி நீள சுரங்கப் பாதைக்குள் மெதுவாக நுழைந்தனர். சிறுத்தை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் சென்ற அவர்கள், பாதுகாப்பான தூரத்தில் இருந்தவாறு அதன் மீது மயக்க ஊசி செலுத்தி வெற்றிகரமாக சிறுத்தையை பிடித்தனர்.

பின்னர் அந்த சிறுத்தை பாவ்தான் பகுதியில் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுத்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு குழுக்களின் கூட்டு முயற்சியால் சிறுத்தை வெற்றிகரமாக பிடிக்கப்பட்டதாகவும், பிடிபட்ட சிறுத்தையால் இதுவரை மனிதர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story